மாவட்ட செய்திகள்
சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேலம்:
சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கூடுதல் படுக்கை வசதிகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிரம்பி வழிகின்றன
குறிப்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 966 படுக்கைகளும், இதர அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 617 படுக்கைகளும் என மொத்தம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,583 படுக்கைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 
மேலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 2 ஆயிரத்து 270 படுக்கைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. 
சிகிச்சை மையம்
இதனிடையே, சேலம் இரும்பாலை வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்தது. 
இந்த நிலையில் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா  தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சேலத்திற்கு வந்தார். 
ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்த அவருக்கு கலெக்டர் கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகளும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக இரும்பாலை வளாகத்திற்கு சென்றார். 
திறந்து வைத்தார்
பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகளையும், ஆக்சிஜன் வசதிகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர். 
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நிலவரம் குறித்தும், அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். 
முதல்-அமைச்சர் உத்தரவு
இதையடுத்து கொரோனா சிகிச்சை மையத்தை விரிவாக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக இதனை மாற்ற வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 
மேலும் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து திருப்பூருக்கு புறப்பட்டு சென்றார். 
முதல்-அமைச்சரின் ஆய்வின்போது சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், விரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலாேசகர் ஆகியோர் உடன் இருந்தனர். 
சேலம் இரும்பாலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.