கிராமங்களில் 342 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம்

கிராமங்களில் 342 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யும் பணியை ஊரக வளர்ச்சித்துறை மேற்கொண்டுள்ளது.;

Update:2021-05-29 01:44 IST
மதுரை,மே.29-
கிராமங்களில் 342 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யும் பணியை ஊரக வளர்ச்சித்துறை மேற்கொண்டுள்ளது.
கிருமிநாசினி
மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அதிக அளவு கொரோனா பரவல் இருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சுற்றுப்புற தூய்மை, கிருமிநாசினி அடித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல், மைக்செட் மூலம் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்தல், நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளை தனிமைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை கிராமங்களுக்கு எடுத்துச்சென்று வினியோகம் செய்வதற்கு 342 தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உரிய சிகிச்சை
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு தோறும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதில் கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வராமல் மாவட்ட தாலுகா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் கிராமங்களில் 100 இடங்களில் மினி கோவிட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மதுரை மாவட்ட உதவி இயக்குனர் ஊராட்சிகள் செல்லத்துரை பயிற்சி அளித்தார். மேலும் அவர் அந்த பணிகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்