மதுரையில் ஒரே நாளில் 19 பேரின் உயிரை பறித்த கொரோனா

மதுரையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 19 பேர் பலியாகினர்

Update: 2021-05-30 19:37 GMT
மதுரை
மதுரையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 19 பேர் பலியாகினர். 
19 பேர் சாவு
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் நேற்று ஒரே நாளில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். அவர்கள் 47,41,43,55 வயது ஆண்கள், 63,68,76,73,74, 86, 65 வயது முதியவர்கள், 48, 47 வயது பெண்கள், 60, 60, 81, 64, 78, 75 வயது மூதாட்டிகள் என 19 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். 
இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததுடன் வேறு சில இணை நோய்களும் இருந்ததால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 888 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பு
மதுரையில் சில தினங்களாக உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகி இருந்தாலும் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது நேற்று 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 7000 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் 792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 575 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். 
மதுரையில் இதுவரை 64 ஆயிரத்து 207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 992 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 47 ஆயிரத்து 504 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 457 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்