ஈரோடு மாவட்டத்தில் 158 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் 158 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கொரோனா தொற்றின் பேரழிவை கட்டுப்படுத்துவதில் அடைந்த படுதோல்வியை மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) மத்திய அரசு அமல்படுத்தியதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோட்டில் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களுக்கு எதிரான தொழிலாளர் நலச்சட்டங்கள், வேளாண் சட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட பொதுச்செயலார் முகசின் காமினூன், துணைத்தலைவர் குறிஞ்சி பாஷா, செயலாளர்கள் முகமது அகீல், சுலைமான், பொருளாளர் யூனுஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பவானி, ஜம்பை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 158 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.