காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க குழு - கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 79 குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2021-06-02 12:00 IST
காஞ்சீபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர். அவ்வாறு இறக்கும் நபர்களின் குழந்தைகள் பெற்றோரின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த பிள்ளைகளின் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய அரசு ரூ.10 லட்சமும், மாநில அரசு ரூ.5 லட்சமும் வழங்க முன்வந்துள்ளது. மேலும் பட்டப்படிப்பு வரையிலான இலவச கல்வி என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளை காக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில், உறுப்பினர் செயலராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் உள்ளார். உறுப்பினர்களாக, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜீவா உள்ளிட்டோர் உள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைகிறதா என்று இந்த குழு கண்காணிக்கும். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய உள்ளது.

இது குறித்த ஆய்வு கூட்டமும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமையில் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்