வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்துபவர்களுக்கு கொரோனா பரிசோதனை; தடுப்பூசியும் போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்துபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து, தடுப்பூசிகள் போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Update: 2021-06-04 20:45 GMT
ஈரோடு
வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்துபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து, தடுப்பூசிகள் போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
நீட்டிக்கக்கூடாது
தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு 7-ந் தேதி காலையுடன் முடிவடைகிறது. எனவே ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வுகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளன.
இந்தநிலையில் ஊரடங்கு நீட்டிக்கக்கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. அதற்கு பதிலாக கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கொரோனா பரிசோதனை
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
மிக இக்கட்டான சூழலில் நாடு இருக்கிறது. நோய்த்தொற்று ஒருபுறம், மக்களின் வாழ்வாதாரம் இன்னொரு புறம். எனவே நோய்த்தொற்று பரவாமலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும் காப்பாற்றப்பட வேண்டும்.   ஊரடங்கு தளர்வு என்பது நல்ல முடிவுதான். அதே நேரம் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான விதிகள் போடப்பட வேண்டும். எந்த ஒரு இடத்திலும் கூட்டம் கூட அனுமதிக்கக்கூடாது. நெருக்கடி இல்லாமல் பொதுமக்கள் வந்து செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்தலாம். காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வேலைகளுக்கு செல்பவர்களுக்காக மட்டும் அரசு பஸ்களை இயக்கலாம். பணிக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதுடன், கொரோனா தடுப்பூசிகள் கட்டாயப்படுத்த வேண்டும். கடைகள் நடத்துபவர்கள், கடைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் முதலில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பாதுகாப்பு
சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என்று அனைவருக்கும் இதுபோன்ற கொரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்று வரும்வரை பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட வேண்டும்.
கடைகளில் அந்தந்த கடைகளின் அளவுகளுக்கு ஏற்ப இடைவெளியை பின்பற்றி மட்டுமே ஆட்கள் நிற்க அனுமதிக்க வேண்டும். அதிகமாக கூட்டம் சேர்த்தால் சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை என்பதை தீவிரப்படுத்தலாம்.
தொண்டு நிறுவனங்கள்
தொழிற்சாலைகளில் ஷிப்ட் முறையில் பணியாளர்களை அனுமதித்து உற்பத்தி மற்றும் சேவை பணிகள் முடங்காமல் பார்ப்பதுடன், ஊழியர்களுக்கு ஊதிய குறைபாடு இல்லாமலும் பார்க்க முடியும்.
சாலைகளில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த, போலீசாரை நேரடியாக பயன்படுத்துவதை விட்டு ஊர்க்காவல் படையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் போலீசார் அவரவர் நிலையங்களில் வரும் வழக்கு விசாரணைகளில் கவனம் செலுத்த முடியும். போக்குவரத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அரசு நினைத்தால் இவற்றை எளிமையாக செயல்படுத்தி ஊரடங்கையும் தளர்த்தி, கொரோனா பரவலையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்