ஆசனூரில் ½ கி.மீ தூரம் ரோட்டில் நடந்து வந்த யானையால் பரபரப்பு; வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்

ஆசனூரில் ½ கி.மீ தூரம் ரோட்டில் யானை நடந்து வந்ததால் வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்.

Update: 2021-06-06 21:03 GMT
தாளவாடி
தாளவாடியை அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று ஆண் யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை ஆசனூர் ரோட்டுக்கு வந்தது. அதன்பின்னர் அந்த யானை சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று யானையை கண்டதும் நின்றுவிட்டது. இதேபோல் பின்னால் வந்த வாகனங்களும் லாரியின் பின்புறம் அப்படியே நின்றுவிட்டன. ரோட்டிலேயே நின்று கொண்டிருந்த யானையானது திடீரென லாரியை நோக்கி மெதுவாக நடக்க தொடங்கியது.
உடனே டிரைவர் அந்த லாரியை பின்னோக்கி இயக்கினார். ஆனால் யானை எந்தவித தொந்தரவும் செய்யாமல் ½ கிலோ மீட்டர் தூரம் வரை மெதுவாகவே நடந்து வந்து கொண்டிருந்தது. டிரைவரும் லாரியை பின்னோக்கி இயக்கி கொண்டிருந்தார். இதேபோல் லாரிக்கு பின்புறம் இருந்த வாகன ஓட்டிகளும் தங்களுடைய வாகனங்களை பின்னோக்கி இயக்கினர். 1 மணி நேரத்துக்கு பின்னர் அந்த யானை அங்கிருந்து தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

மேலும் செய்திகள்