அம்மாபேட்டையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த தாய் போக்சோ சட்டத்தில் கைது- வாலிபர் சிறையில் அடைப்பு

அம்மாபேட்டையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வாலிபரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-06-11 22:25 GMT
பவானி
அம்மாபேட்டையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வாலிபரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 26). கூலித்தொழிலாளி. சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். கனகராஜின் உறவினர் ஆவார்.
இந்த நிலையில் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோரிடம் சென்று, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுத்துவிட்டார். தாய் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கட்டாய திருமணம்
இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் கடந்த மாதம் 17-ந் தேதி சிறுமியை சேலம் மாவட்டம் மோளபாளையம் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு கனகராஜும் வந்தார். 
பின்னர் சிறுமியை அவரது தாய் கனகராஜுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் சிறுமி காவலன் செயலி மூலம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதில் அவர், ‘இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்டாயப்படுத்தி எனது தாய் எனது உறவினருக்கு திருமணம் செய்து வைத்தார்’ என்று கூறியுள்ளார்
தாய்-வாலிபர் கைது
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு் இதுகுறித்து விசாரிக்க ஈரோடு மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலர் ஞானசேகரிடம் கூறினார்.
 அவர் இதுபற்றி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சிறுமி, அவருடைய தாய் மற்றும் கனகராஜ் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் சிறுமிக்கு தாய் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் மற்றும் கனகராஜை         கைது செய்தார். 
பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கனகராஜ் கோபி மாவட்ட சிறைச்சாலையிலும், சிறுமியின் தாய் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்