காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 20 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.;
காஞ்சீபுரம்,
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை மற்றும் மது ஊறல்கள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் போலீசார் மதுவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 130 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர் மேலும் 340 லிட்டர் மது ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இது சம்பந்தமாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்றாலோ அல்லது ஊறல் வைத்திருந்தாலோ காஞ்சீபுரம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 044 -27 236 111 மற்றும் தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண் 044- 27238001 என்ற தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.