பிளஸ்-1 வகுப்பில் 3,476 மாணவ-மாணவிகள் சேர்க்கை

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 வகுப்பில் 3,476 மாணவ-மாணவிகள் சேர்க்கை நடந்தது.

Update: 2021-06-14 18:34 GMT
சிவகங்கை,

கொரோனா தொற்று பரவுதல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறாததால் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அடுத்த கல்வியாண்டு தொடங்க இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதற்காக அரசு நிர்வாக பணிக்காக மட்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகள் நிர்வாக பணிக்காக திறக்கப்பட்டன. புதிதாக வகுப்பில் சேர வந்த மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டது. திருப்பத்தூர் அருகே உள்ள தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். புதிதாக 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டது.
10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டதால் 9-ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் 11-ம் வகுப்பில் பாடப்பிரிவுகள் தேர்ந்ெதடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதன்படி நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இது குறித்து சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசுபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளி என 163 பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. 9-ம் வகுப்பில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இந்த சேர்க்கை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 163 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 476 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்