ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-14 22:16 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
1,295 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் சூழ்நிலையில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் குறைந்தபாடில்லை. இந்த 2 மாவட்டங்களிலும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, கோவையில் 1,728 பேரும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 1,295 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 555 ஆக உயர்ந்தது.
3 பேர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 10-ந்தேதி திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்றே அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதேபோல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 72 வயது முதியவர் கடந்த 11-தேதியும், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் கடந்த 13-ந் தேதியும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 495 ஆக உயர்ந்தது.
10,965 பேர் சிகிச்சை
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,698 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 66 ஆயிரத்து 95 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 10 ஆயிரத்து 965 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்