ஒரு மாதத்தில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.;

Update:2021-06-16 03:42 IST
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் அரசின் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஈரோடு காசிபாளையத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்புகளை வழங்கினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது கடுமையான நெருக்கடி சூழல் இருந்தது. கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்ததுடன் படுக்கை வசதி, ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை போன்றவை போதுமான அளவு இல்லை. கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு சிகிச்சைக்கு அனுமதிக்க படுக்கை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் அல்லது பிற வாகனங்களில் இருந்தபடியே சிகிச்சை வழங்குவதை பார்க்க சிரமமாக இருந்தது.
முற்றுப்புள்ளி
அரசின் கடுமையான முயற்சியுடன் பல்வேறு அமைப்பின் ஒத்துழைப்புடன் 10 ஆயிரத்து 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த பல நிலைகளில் சிகிச்சை வழங்கப்படுவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாக உள்ளன.
கொரோனா நோயுடன் வருபவர்கள் எங்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை எட்டி உள்ளோம். கொரோனா பாதிப்பு பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்ததால் கடந்த ஒரு மாதத்தில் 20 சதவீதம் பாதிப்பு இருந்தது தற்போது 12 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மேலும் செய்திகள்