ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,123 பேருக்கு கொரோனா- 12 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 12 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-16 23:03 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 12 பேர் பலியாகி உள்ளனர்.
1,123 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுகிறது. குறிப்பாக நகர்புறங்களைவிட கிராமங்களில் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. அந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் 1,270 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தமிழகத்திலேயே அதிக தொற்று பரவலில் தொடர்ந்து 2-வது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. இதுவரை மொத்தம் 79 ஆயிரத்து 938 பேர் கொரோனாவுக்கு பதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் 69 ஆயிரத்து 467 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,733 பேர் குணமடைந்தனர்.
12 பேர் பலி
கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்து வந்தாலும், புதிதாக பாதிக்கப்படுபவர்களை காட்டிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட குறைந்தது. தற்போது 9 ஆயிரத்து 962 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 12 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த மாதம் 17-ந் தேதியும், 55 வயது பெண், 60 வயது மூதாட்டி, 75 வயது முதியவர், 79 வயது மூதாட்டி ஆகியோர் கடந்த 11-ந் தேதியும், 48 வயது ஆண், 60 வயது முதியவர் ஆகியோர் 12-ந் தேதியும், 49 வயது ஆண், 56 வயது ஆண், 58 வயது ஆண், 70 வயது முதியவர் ஆகியோர் 13-ந் தேதியும், 78 வயது முதியவர் நேற்று முன்தினமும் உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 509 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்