தொடக்கப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடம் செல்வதா? வேண்டாமா?- கல்வித்துறை அதிகாரிகள் தெளிவான உத்தரவு வழங்காததால் குழப்பம்
தொடக்கப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடம் செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெளிவான உத்தரவுகள் வழங்காததால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.;
ஈரோடு
தொடக்கப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடம் செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெளிவான உத்தரவுகள் வழங்காததால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளன. ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கடந்த 14-ந் தேதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் இயங்கும் என்று அறிவித்தது. மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வரத்தேவை இல்லை என்றாலும், நடப்பு 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகள் அறிவிப்பு, இ.எம்.ஐ.எஸ். பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக அரசு பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு சேர்க்கை நடந்தது. பிற வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
குழப்பம்
இந்த நேரத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடத்துக்கு வருவது குறித்த எந்த உரிய அறிவிப்பும் வழங்கப்படவில்லை. காரணம், தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கூடங்களில் மட்டும்தான் அலுவலக பணியாளர்கள் உள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் அலுவலக பணிகளையும் தலைமை ஆசிரியர்களே செய்ய வேண்டும். எனவே இந்த உத்தரவு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கானதா, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களுக்கானதா என்பதே சரியாக இல்லாமல் குழப்பம் அடைய வைத்து இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மேல் நிலை கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை தனித்தனியாக இயங்கி வந்தது. இதுபோல் அனைவருக்கும் கல்வி இயக்கமும் தனியாக இருந்தது. இந்த ஒவ்வொரு துறைக்கும் தனியாக கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மாவட்டத்துக்கு 2 முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தொடக்கக்கல்வித்துறைக்கு தனியாக கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் இருந்தனர்.
அடிப்படை வசதிகள்
முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களின் செயல்பாடுகளை கவனித்து வருவார்கள். தொடக்கக்கல்வித்துறை அதிகாரி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களின் செயல்பாடுகளை கவனிப்பார். அவருக்கு கீழ் உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், வட்டார வளமைய கல்வி அதிகாரிகள் இருப்பார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டன. இது நிர்வாகத்துக்கு எளிதாக இருந்தாலும், செய்திகள் பகிரப்படுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.
குறிப்பாக உயர் அதிகாரிகள் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கு விடும் உத்தரவுகள் அனைத்தும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களுக்கும் அறிவிக்கப்பட்டன. இது நடைமுறையில் சாத்தியம் இல்லாத நிலையில் உள்ளது. அதிகார மாற்றம் மட்டுமே செய்து விட்டு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கான ஒரு குறு மையத்தை ஏற்படுத்தி அதற்கு ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு என்ற நடைமுறை புகுத்தப்பட்டதால், சம்பந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவரது பள்ளி பணிகளை செய்வதில் பாதிப்பு ஏற்படுவதுடன், பிற தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிட்டு அவர்களின் பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்தநிலையில்தான் இப்போது வந்து இருக்கும் பள்ளி திறப்பு உத்தரவு ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவர்கள் சேர்க்கை
இதற்கிடையே கொரோனா ஊரடங்கு தளர்வு இல்லாத ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்க வேண்டியது இல்லை என்று ஒரு அறிவிப்பு வருகிறது. ஆனால், அதில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி ஆகியோரின் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. தேர்தல் பணி, புள்ளிவிவர சேகரிப்பு பணி என்று ஆசிரிய-ஆசிரியைகள் ஏராளமானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி விட்டனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இந்தநிலையில் ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டுமா? வேண்டாமா? என்ற அறிவிப்பில் கூட குழப்பத்தை ஏற்படுத்துவதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவியர் சேர்க்கை தொலைபேசியில் நடத்தினால் போதும் என்று கூறப்பட்டு உள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவர் சேர்க்கை ஊர்வலம், வீடு வீடாக களப்பணி என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மாணவ-மாணவிகளை சேர்த்து வருகிறோம். கிராமப்புறங்களில், உங்கள் பள்ளிக்கூடத்தில் எங்கள் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று எந்த பெற்றோரும் வருவதில்லை. போராடிதான் ஒவ்வொரு சேர்க்கையையும் கொண்டு வருகிறோம்.
உத்தரவு
ஆசிரிய-ஆசிரியைகளை பொறுத்தவரை பணி செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் உரிய உத்தரவு இல்லாமல் பள்ளிக்கூடத்துக்கு வருவது என்பது குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். காரணம், தற்போது உரிய உத்தரவு இல்லாமல் இருக்கிறது. அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு ஏற்ப பள்ளிக்கூடம் வரும்போதோ, திரும்ப செல்லும்போதே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது. அதிகாரிகள் நாங்கள் எந்த உத்தரவையும் வழங்கவில்லை என்று தப்பித்துக்கொள்வார்கள். ஆனால் அப்பாவி ஆசிரிய-ஆசிரியைகளின் குடும்பங்கள்தான் பாதிக்கப்படும். ஏற்கனவே ஓய்வூதியம் இல்லை, பணிக்கொடைகள் கிடைக்குமா என்ற கேள்வியில் இருக்கும் ஆசிரியர்களின் குடும்பங்கள் திண்டாடும் நிலை வேண்டாம். எனவே தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பணிக்கு செல்ல வேண்டுமா வேண்டாமா என்ற சரியான உத்தரவு மற்றும் சுழற்சி முறையில் எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவினையும் அதிகாரிகள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.