பெருந்துறையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 100 பேருக்கு கொரோனா பரிசோதனை

பெருந்துறையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-06-17 17:09 GMT
பெருந்துறையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஊரடங்கை மீறி...
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் வெளியில் செல்லும் போது முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர். ஆனால் பலர் அத்தியாவசிய காரணங்களின்றி வெளியில் சுற்றிதிரிகிறார்கள். 
இதனால் ஊரடங்கை மீறி ரோட்டில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் வருகிறார்கள்.
100 பேருக்கு பரிசோதனை
இந்தநிலையில் நேற்று காலை பெருந்துறை ஈரோடு ரோடு போலீஸ் நிலையம் எதிரே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் ரோட்டை சுற்றி வந்ததாக 40 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் பிடித்து, அவர்கள் அனைவரையும், அருகில் இருந்த பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அங்கு முகாமிட்டிருந்த திங்களூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் 100 பேரின் பெயர் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து, பின்னர் அவர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்தனர். பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவுகள் 2 நாட்களுக்குள் அவர்களது செல்போன் மூலம் தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். 
பெருந்துறை போலீஸ் நிலையம் எதிரே தேவையில்லாமல் ரோட்டில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் பிடித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதை பார்த்த சிலர் வந்த வழியே திரும்பிச்சென்றனர்.

மேலும் செய்திகள்