ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது -மதுரை ஐகோர்ட்டு கருத்து

வருகைப்பதிவு இல்லை என்று 10-ம் வகுப்பு மாணவனின் தேர்ச்சியை நிராகரித்த நடவடிக்கையை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்தது.;

Update:2021-06-19 01:25 IST
மதுரை, ஜூன்
வருகைப்பதிவு இல்லை என்று 10-ம் வகுப்பு மாணவனின் தேர்ச்சியை நிராகரித்த நடவடிக்கையை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்தது.
தேர்ச்சி நிராகரிப்பு
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மகன் ஸ்ரீதர். சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தான். கல்வி கட்டணமும் செலுத்தினோம். கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் நடத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் அனைத்து மாணவர்களும் அடுத்தக்கட்ட படிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், என் மகனுக்கு மட்டும் அவன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. தேர்ச்சி பட்டியலில் என் மகன் பெயர் விடுபட்டுபோனதால், அடுத்த கல்வியாண்டில் நிச்சயம் சேர்ப்பதாக கூறினர்.
ஆனால், 2020-21ம் கல்வி ஆண்டிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தும், எனது மகன் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிடவில்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் எனது மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் போதிய வருகைப் பதிவு இல்லை என்று தேர்ச்சி அறிவிப்பு செய்யவில்லை. இந்த உத்தரவை ரத்து செய்து, எனது மகன் 2020-21ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நடவடிக்கை ரத்து
இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. நேரடி வகுப்புகள் இல்லாமல் 2020-21ம் கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடந்துள்ளன. 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மனுதாரர் மகன் முறையாக வகுப்பிற்கு வரவில்லை எனக்கூறி அவரை தேர்ச்சி செய்வதில் இருந்து நிராகரிப்பதை ஏற்க முடியாது. கொரோனாவால் பல சிறுவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு, கவுன்சிலிங் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் புதுவிதமான பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டு உள்ளனர். எனவே மனுதாரர் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2020-21ம் கல்வியாண்டில் அவர் தேர்ச்சி பெற்றதாக 2 வாரத்தில் அறிவிக்க வேண்டும். 
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்