சிவகிரி பகுதியில் மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல்; விவசாயிகள் கவலை
சிவகிாி பகுதியில் மரவள்ளி பயிரில் கடந்த 2 மாதங்களாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.;
சிவகிரி
சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வேட்டுப்பாளையம், சிலுவம்பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளி கிழங்கு அதிகஅளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடை நிலையை எட்டப்பட உள்ளது. இந்த பயிரில் கடந்த 2 மாதங்களாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் நடவு செய்த முதல் 4 மாதத்திற்குள் இருக்கும் மரவள்ளி செடிகளுக்கு மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக பரவி காணப்படுகிறது. இதனால் செடிகள் கருகி வருகிறது.
விவசாயிகள் பலமுறை மருந்துகள் தெளித்தும் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதேநிலை நீடித்தால் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக மரவள்ளி கிழங்கு பயிரை பார்வையிட்டு மாவு பூச்சி தாக்குதலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.