உத்திரமேரூர் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
உத்தரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.;
உத்திரமேரூர்,
காவனூர்-புதுச்சேரி கூட்ரோடு அருகே சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த முட்புதர் அருகே இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர். உடனடியாக போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் காவனூர் புதுச்சேரியை சேர்ந்த மேகநாதன் (வயது 46) என்பதும், மற்றொருவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த ஜீவா (21) என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் சென்னையில் கட்டிட வேலையில் கம்பி கட்டும் வேலைக்கு சென்றபோது அங்கே கஞ்சா விற்பவர்களிடம் பழக்கம் ஏற்பட்டு அங்கிருந்து 400 கிராம் கஞ்சா வாங்கி வந்து அதை சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி கொண்டிருந்ததாகவும் அந்த நேரத்தில் போலீஸ் வரவே ஓடியதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டு காவலுக்கு அனுப்பப்பட்டனர்.