காஞ்சீபுரத்தில் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டுக்கு அனுமதி

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2021-06-29 11:22 IST
காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மே 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து வழிபாட்டுதலங்களிலும் பக்தர்கள் தரிசனைத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று முதல் முதல்கட்டமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதைதொடர்ந்து இன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசத்தி பெற்ற கோவில்களான வரதராஜ பெருமாள் திருக்கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் காலை 6 மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் காஞ்சீபுரம் மண்டல இணை ஆணையர் பொ.ஜெயராமன் மேற்பார்வையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 642 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களது உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டப்பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கோவில்களில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் தட்டுகளில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நீண்ட நாள்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்