அம்மாபேட்டை அருகே கீரைக்கட்டுக்குள் பதுக்கி 743 கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தல்; 3 பேர் கைது-வேன் பறிமுதல்

அம்மாபேட்டை அருகே வேனில் கீரைக்கட்டுக்குள் பதுக்கி வைத்து 743 கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2021-06-30 05:19 IST
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே வேனில் கீரைக்கட்டுக்குள் பதுக்கி வைத்து 743 கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.  
தீவிர வாகன சோதனை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. 
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. 
இதனால் ஈரோடு மாவட்டத்தில் வெளிமாவட்டத்தில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மது பாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகளை யாராவது கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கிறார்களா என்பதை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
கீரைக்கட்டுக்குள் பதுக்கல்
இந்தநிலையில் அம்மாபேட்டையை அடுத்த சின்னப்பள்ளத்தில் உள்ள சோதனை சாவடியில் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது அந்த சரக்கு வேனில் கீரைக்கட்டுகள் இருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கீரைக்கட்டுகளை அப்புறப்படுத்தியபோது அட்டை பெட்டிகளில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
 3 பேர் கைது
இதைத்தொடர்ந்து சரக்கு வேனில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்த குகானந்தன் (வயது 38), அதே பகுதியை சேர்ந்த சந்துரு (20) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், 3 பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கீரைக்கட்டுக்குள் பதுக்கி வைத்து சரக்கு வேனில் அம்மாபேட்டை பகுதிக்கு கடத்தி வந்ததும்,’ தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 743 கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்