அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்

அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.;

Update:2021-07-01 03:26 IST
ஈரோடு
அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை
ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. எல்.கே.ஜி. வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகளுடன் இயங்கும் இந்த பள்ளிக்கூடத்தின் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது.
இதற்கான விழா பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் தொடங்கிவைத்தார்
விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு புதிய மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேலும், மழலையர் வகுப்பில் புதிதாக சேர்ந்த குழந்தைகளின் கை பிடித்து நெல்லில் அகரம் எழுதி அவர்களின் கல்வியை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களை வழங்கினார்.
விழாவில் ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி மாதேசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, துணைத்தலைவர் ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் வி.எஸ்.முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார். அனைத்து ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவியரின் பெற்றோர் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்