கொரோனாவால் இறந்தார் என வதந்தி பரவியதால் ஓட்டல் தொழிலாளி உடலை புதைக்க எதிர்ப்பு- ஆம்புலன்சை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கொரோனாவால் இறந்தார் என வதந்தி பரவியதால் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட ஓட்டல் தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2021-07-07 03:50 IST
அந்தியூர்
கொரோனாவால் இறந்தார் என வதந்தி பரவியதால் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட ஓட்டல் தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஓட்டல் தொழிலாளி 
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 60). இவர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தாரில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் தனியாக தங்கி இருந்து ஓட்டலுக்கு சென்று வேலை செய்தார். 
இந்த நிலையில் நேற்று காலை சின்னப்பனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 
சாவு
இதைத்தொடர்ந்து அவருடன் சேர்ந்து வேலை செய்த சக தொழிலாளர்கள் சின்னப்பனை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாலையில் உயிரிழந்தார்.  இதைத்தொடர்ந்து அந்தியூர் அருகே கண்டியனூர் மேட்டூர் மயானத்தில் அடக்கம் செய்வதற்காக சின்னப்பனின் உடலை பவானி போலீசார் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். 
வதந்தி
இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சின்னப்பன் கொரோனாவால்தான் இறந்தார் என வதந்தி பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து சின்னப்பனின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தினர். 
அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘கொரோனா காரணமாக சின்னப்பன் இறக்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாகவே இறந்தார். எனவே அவருடைய உடலை புதைக்க விடுங்கள்,’ என்றனர். 
ஆனால் போலீசாரின் சமாதானத்தை பொதுமக்கள் ஏற்கவில்லை. 
இதனால் சின்னப்பனின் உடலை புதைக்காமல் மீண்டும் ஆம்புலன்சிலேயே போலீசார் பவானிக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்