மரம் விழுந்து முதியவர் பலி
சோழவந்தான் பகுதியில் பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து முதியவர் ஒருவர் பலியானார்.;
சோழவந்தான்,ஜூலை
சோழவந்தான் பகுதியில் பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து முதியவர் ஒருவர் பலியானார்.
பலத்த மழை
சோழவந்தான் பகுதியில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பலத்த காற்று இடி-மின்னலுடன் மழை பெய்தது.
இதனால் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில், பேட்டை பகுதி, தபால் நிலையம் முன்பு, அரசு ஆஸ்பத்திரி முன்பு, காமராஜர் சிலை அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டது.
மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விழுந்து கிடந்த மரங்களை அகற்றி மின் வினியோகத்தை சீர்படுத்தினர். இதேபோல் குருவித்துறை, கண்ணுடையாள்புரம் ஆகிய கிராமங்களில் தென்னை மரங்கள் ரோட்டின் குறுக்கே விழுந்தன. மன்னாடிமங்கலம் கிராமத்தில் பழமையான புளியமரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது. நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
முதியவர் பலி
மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (வயது 75) என்பவர் அங்குள்ள தோப்பில் இருந்து வெளியே வந்தபோது மரம் ஒன்று சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரன் மற்றும் கிராம உதவியாளர்கள் காடுபட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவரது உடலை மீட்டனர். இதேபோல் மாநகர் பகுதி மற்றும் புறநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. மதுரை நகரில் இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவிலும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.