கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

ஈரோட்டில், கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து, நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2021-07-09 04:11 IST
ஈரோடு
ஈரோட்டில், கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து, நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் கட்டணம் வசூல்
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் கடை நடத்தும் வியாபாரிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குத்தகைக்கு விடப்பட்டது. அப்போது ஒவ்வொரு கடைக்கும், இனத்திற்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விபரத்தை ஏலத்தின் போது மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்து இருந்தது.
ஆனால் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட குத்தகைதாரர்கள் பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதாக வியாபாரிகள் தரப்பில் குற்றம் சாட்டி வந்தனர். இந்த கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் விவகாரம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடையடைப்பு போராட்டம்
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 6-ந்தேதி வியாபாரிகள் காய்கறிகளை ரோட்டில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா நேற்று முன்தினம் வியாபாரிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்வதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காணக்கோரியும் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டனர். வியாபாரிகளின் போராட்டத்தால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
731 உறுப்பினர்கள்
போராட்டம் குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-
நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர், மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு வசூல் செய்கின்றார். கொரோனா பாதிப்பு காரணமாக வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், அநியாயமாக கட்டணம் வசூலிக்கின்றனர். மார்க்கெட்டில் மொத்தம் 731 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 807 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே தான் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (அதாவது நேற்று) நாங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே நிர்ணயிக்கப்பட்ட கடைகளுக்கு, நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில் குத்தகையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக வியாபாரிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வியாபாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்