ரூ.10 ஆயிரம் கொடுக்க மறுத்த பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு

மதுரையில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2021-07-10 01:34 IST
மதுரை,ஜூலை.
மதுரையில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
முகமூடி கொள்ளையன்
மதுரை வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் மனைவி புவனேஸ்வரி (வயது 47). இவர் விசுவநாதபுரத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜவகர், வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு படித்து வருகிறார். புவனேஸ்வரி தனது தந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி கதவை பூட்டி விட்டு  தூங்கி விட்டார். திடீரென்று நள்ளிரவு நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவர் எதிரே நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நபர் கத்தியை காட்டி சத்தம் போடக்கூடாது என்று மிரட்டினார்.
பணம், நகை பறிப்பு
மேலும் அந்த நபர் தனது தங்கையின் மருத்துவ செலவிற்கு அவசரமாக 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதை கொடுத்து விட்டால் இங்கிருந்து சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். உடனே புவனேஸ்வரி தனது வீட்டில் பணம் எதுவும் இல்லை என்றார். உடனே அந்த நபர் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து பணம் கொடுக்க வில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதற்கிடையில் புவனேஸ்வரி கையில் மறைத்து வைத்திருந்த செல்போனையும் அந்த நபர் பிடுங்கி கொண்டார்.
மேலும் புவனேஸ்வரியிடம் பீரோவை திறக்க சொல்லி அங்கு வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் மற்றும் அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகைகளை பறித்து கொண்டார். பின்னர் அவர் புவனேஸ்வரியிடம் அவருடைய செல்போனை கொடுத்து யாரிடம் சொல்லக்கூடாது, போலீசில் புகார் கொடுத்தால் திரும்பி வந்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
வலைவீச்சு
பின்னர் அவர் செல்லும் போது கதவை வெளியே பூட்டி விட்டு தப்பி விட்டார். இது குறித்து புவனேஸ்வரி பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் மற்றும் போலீசாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு சுப்பிரமணியபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் நடந்த சம்பவம் குறித்து புவனேஸ்வரியிடம் கேட்டறிந்து, அது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி பெண்ணை மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்