வாழைகள் சேதமான அதிர்ச்சியில் ஒருவர் சாவு

பேரையூர் தாலுகா பகுதியில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோழவந்தான் அருகே வாழைகள் சேதமான அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழந்தார்.;

Update:2021-07-10 01:38 IST
பேரையூர், ஜூலை
பேரையூர் தாலுகா பகுதியில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோழவந்தான் அருகே வாழைகள் சேதமான அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழந்தார்.
கன மழை
மதுரை மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை பரவலாக கன மழை பெய்தது. இதில் பேரையூரில் 57 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையால் பேரையூர் தாலுகா தாடையம்பட்டி கிராமத்தில் ராஜாத்தி, விஜயசாந்தி, மாயக்கண்ணன், நல்லகுரும்பன், ராமர், வைரம், பேச்சியம்மாள் ஆகிய 7 பேருடைய வீடுகள் இடிந்தன. மேலும் சாப்டூரை சேர்ந்த ரவி என்பவருடைய பசுமாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. இது குறித்து வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெருங்காமநல்லூர், சென்னம்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பாகற்காய் செடிகள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இந்த மழையால் தோட்ட விவசாயம் நன்றாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழையால் சோளப் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வாழை மரங்கள் சாய்ந்தன
மேலூர் பகுதியில் மேலவளவு, எட்டிமங்கலம், கிடாரிப்பட்டி, அ.வல்லாளபட்டி, கல்லம்பட்டி, சூரக்குண்டு, சுக்காம்பட்டி, நாவினிப்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், சருகுவலையபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். அந்த வாழை மரங்கள் மழை மற்றும் சூறாவளி காற்றால் ஒடிந்து கீழே சாய்ந்தன். இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு கவலை அடைந்துள்ளனர். எனவே வாழை மரங்கள் சேதம் அடைந்த பகுதிகளை வேளாண்மை துறையினர் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
இதனிடையே சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சோனைமுத்து 3 ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார். நேற்று காலை ேதாட்டத்துக்கு சென்ற அவர் பலத்த மழை, காற்றுக்கு வாழைகள் சேதம் அடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆசிரியர் சோனைமுத்துவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் பழனிகுமாரிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்