பெருந்துறை அருகே பிரபல கேரள கொள்ளையன் கைது; தப்பி ஓடிய மர்மநபருக்கு வலைவீச்சு

பெருந்துறை அருகே பிரபல கேரள கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2021-07-12 03:14 IST
பெருந்துறை
பெருந்துறை அருகே பிரபல கேரள கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓட்டல் உரிமையாளர்
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் சுப்ரான் (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஓட்டல் முன்பு நண்பர் செந்தில் என்பவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றுள்ளது. அதிலிருந்து மர்மநபர்கள் 2 பேர் கீழே இறங்கி வந்தார்கள்.
திடீரென அவர்கள் தங்களது கையில் வைத்திருந்த கத்தியை காட்டி சுப்ரானிடம், சத்தம் போடாமல் உனது சட்டை பையில் உள்ள பணத்தை வெளியே எடு என்று மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார்.
பணம் பறிப்பு
உடனே மர்மநபர்கள் 2 பேரும் அவரிடம், கேரளாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் எங்கள் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. உன்னை கத்தியால் குத்துவதால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது என்று கூறியுள்ளனர்.
இதனால் பயந்து போன, சுப்ரான் தனது பையில் இருந்த ரூ.1,500-யை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு 2 பேரும் தங்களது காரை நோக்கி சென்றனர். அப்போது சுப்ரானும், அவரது நண்பரும், “திருடன் திருடன்” என்று சத்தம் போட்டுள்ளனர்.
ஒருவர் பிடிபட்டார்
இவர்களது சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பொதுமக்களை பார்த்ததும் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். அவர்களை பொதுமக்கள் பின்னால் துரத்தி சென்றனர். இதில் ஒரு நபரை பிடித்தனர். மற்றொரு நபர் தப்பித்து ஓடிவிட்டார்.
பின்னர் இதுபற்றி சுப்ரான் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், அங்கு சென்று பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினார்கள்.
பிரபல கொள்ளையன் கைது
விசாரணையில் அந்த வாலிபர் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், கண்டிச்சேரியைச் சேர்ந்த, அஸ்ரப் மகன் அன்சப் (26) என்பதும், இவர் மீது, கேரளா மாநிலம் முழுவதும், 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து பணம் ரூ.1,500-யையும், அவர் ஓட்டி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அன்சப்பை கைது செய்தனர். தப்பி ஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்