காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் அலுவலகத்தில் மனு
காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.;
ஈரோடு
காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மக்களிடம் மனு வாங்கிய கலெக்டர்
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முழுமையாக ரத்தானது. தேர்தல் முடிந்தாலும், தேர்தல் நடத்தை விதிமுறை, கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுவை போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அங்கு மனுக்களுடன் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் சென்று மனுக்களை பெற்று, கொரோனா ஊரடங்கு காரணமாக மனு பெறப்படுவதில்லை. இங்கு நிற்பவர்கள் மட்டும் மனுக்களை கொடுங்கள் எனக்கூறினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வரிசையில் நின்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கண்ணீர் மல்க...
சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண், கணவரை பிரிந்து மகளுடன் வசிப்பதால் தனக்கு பணி வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். மற்றொரு பெண் கைக்குழந்தையுடன் வந்து கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தனது கணவர் குடும்பம் நடத்த பணம் எதுவும் தருவதில்லை என்றும், தினமும் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனு வழங்கினார்.
அந்தியூர் புரவிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா மற்றும் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பவானி படவல்கால்வாய் கிராமத்தில் காவிரி ஆறு அருகே குருவரெட்டியூர் மற்றும் அந்தியூர் வட்டார விவசாயிகள் நீரேற்று பாசன சங்கங்களுக்கு சொந்தமான 2 பெரிய கிணறுகள் உள்ளன. இந்த 2 நீரேற்று பாசன விவசாய சங்கத்தினர் தங்களது கிணற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதால் தங்களது கிணற்றில் இருந்து காவிரி ஆறு வரை தென்னந்தோப்பிற்கு மத்தியில் ராட்சத குழாய்கள் பதித்து காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுக்கின்றனர். அரசிடம் அனுமதி பெறும்போது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதாக அனுமதியைப் பெற்றுக்கொண்டு தற்போது காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து வருகின்றனர். காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுப்பதை தடுத்து, 2 நீரேற்று பாசன சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, கிணறுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
குழாய் அமைக்க எதிர்ப்பு
இலுப்புலி பகுதியை சேர்ந்த அங்கமுத்து என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘தனக்கு பாத்தியப்பட்ட கூட்டு குடும்ப சொத்தில் குழாய் பதிக்க முயற்சி செய்யும் விவசாய நீரேற்று சங்கத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். முறையாக அனுமதிபெறாமல் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும். சொத்துக்கு பாதுகாப்பு அளித்து, நீரேற்று பாசன சங்கத்துக்கு ஆதரவாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
பெருந்துறை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் தலைமையில் நிர்வாகிகள் வெங்கடேஷ், பூபதி, ஜாபர் அலி ஆகியோருடன் வந்து, தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.
சூதாட்ட விளையாட்டு
இந்து இளைஞர் முன்னணி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘கொரோனா ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் ஸ்மார்ட் போன் மூலம் நடந்து வருகிறது. ஆன்லைனில் பிரி பையர், பப்ஜி, பேட்டில் கிரவுண்ட்ஸ் போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை குழந்தைகள் விளையாடி வருகின்றனர். இதனால், படிப்பில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, இது போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
நம்பியூர் பூச்சநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கொடுத்திருந்த மனுவில், தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்து 17 ஏக்கர் உள்ளது. 4 பேருக்கு சொந்தமான இந்த சொத்து இதுவரை பாக பிரிவினை செய்யப்படவில்லை. இதற்கிடையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்களுடைய இடத்தை போலி பத்திரம் மூலம் அவருடைய பெயருக்கு கிரையம் செய்துவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.