கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி இழப்பு- ஈரோட்டில் குறிஞ்சி சிவக்குமார் பேட்டி

கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-15 23:19 GMT
ஈரோடு
கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக பொறுப்பேற்ற குறிஞ்சி என்.சிவகுமார் நேற்று அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டிற்கு வருகை வந்தார். அவருக்கு ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அதைத்தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில், அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில்  தி.மு.க. ஆட்சியில் 32 லட்சம் அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் அவற்றை முறையாக பராமரிக்காமல், தனியார் செட்டாப் பாக்ஸ்களை அமைத்துக்கொள்ள விட்டுக் கொடுத்ததால் தற்போது 26 லட்சம் அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் முதலிடத்தில் இருந்த அரசு கேபிள் டி.வி. இணைப்பு தற்போது 2-ம் இடத்துக்கு வந்து விட்டது.
 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மீண்டும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முதலிடத்திற்கு கொண்டு வர முனைப்புடன் பணியாற்றுவோம்.
ரூ.400 கோடி இழப்பு
அ.தி.மு.க. ஆட்சியின்போது தவறான கொள்கை முடிவினால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் டி.வி. இணைப்பை செட்டாப் பாக்சில் வழங்க 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கி, அதில் 26 லட்சம் செட்டாப் பாக்ஸ்களுக்கு மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் எங்குள்ளது? என தெரியவில்லை. அவற்றை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை அதிகமாக உள்ளது. இதனை பெறவும், இழப்புக்கு காரணத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு கல்வி தொலைக்காட்சிகள், விளையாட்டு சேனல்கள் சேவை கிடைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டதால், நேற்று முன்தினம் முதல் பல புதிய சேனல்களை அரசு செட்டாப் பாக்சில் இணைத்துள்ளோம்
இ-சேவை மையம்
தற்போது அனைத்து வகையான சேவையும், இ-சேவை மையம் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து பெற வேண்டி உள்ளது. அதனால் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பது குறித்து தமிழக முதல்-அமைச்சர் தான் முடிவுகளை அறிவிப்பார். ஏற்கனவே அரசு செட்டாப் பாக்ஸ் வைத்திருந்து தனியாருக்கு மாறியவர்களுக்கு மீண்டும் அரசு செட்டாப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு செட்டாப் பாக்ஸ் பெற மக்கள் விண்ணப்பிக்கும்போது, தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்