உயர் மின்கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி

உயர் மின்கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி

Update: 2021-07-16 20:52 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள உச்சபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). விவசாயி. இவர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். உச்சபட்டியில் துணைக்கோள் நகரம் அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை எடுத்திருந்தது. தற்போது சாலை, மின் கம்பம் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து வருகிறது. இந்தநிலையில் சுப்பிரமணியத்தின் தோட்டத்து கிணற்றில் ஒரு பகுதி வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்டுள்ளது. இதனால் வீட்டு வசதி வாரியம் இதுவரையில் இரண்டு முறை மின்சாரத்தை துண்டித்து உள்ளது. பின்னர் பேச்சுவார்த்தை மூலமாக மின்வினியோகத்தை சுப்பிரமணியம் வாங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சுப்பிரமணியத்தின் தோட்டத்திற்கு செல்லும் மின்சாரத்தை மின்வாரியம் துண்டித்தாக தெரிகிறது. இதனால் கிணற்றில் இருந்து சுப்பிரமணியம் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்தில் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து சுப்பிரமணி நேற்று மதியம் 2 மணிக்கு தனது தோட்டத்தின் அருகே உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார். உச்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் உள்ளிட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சுப்பிரமணியத்துடன் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்பு சுப்பிரமணியம் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். மேலும் அவரது தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்