பெருந்துறையில் ரோட்டில் வியாபாரிகள் கடை போடுவதால் போக்குவரத்து பாதிப்பு

பெருந்துறையில் ரோட்டில் வியாபாரிகள் கடை போடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update:2021-07-18 02:47 IST
பெருந்துறை பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ், பழைய பஸ் நிலையமாக இருந்த இடம், கடந்த 32 ஆண்டுகளாக தினசரி மார்க்கெட்டாக இயங்கி வருகிறது. சென்னிமலை ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரோடு ஆகியவை சந்திக்கும் பிரிவில், இந்த மார்க்கெட் இயங்கி வருகிறது. மார்க்கெட் வளாகத்திற்குள் கடைகள் விரிக்க போதுமான இடம் உள்ளது. ஆனால் வியாபாரிகள் சிலர் அங்கு செல்லாமல் மார்க்கெட் எதிரே உள்ள ஒரு வழிப்பாதை ரோட்டை ஆக்கிரமித்து, அதன் இருபுறமும் காய்கறி கடைகளை அமைத்துள்ளனர். இதனால், ஈரோடு மார்க்கத்தில் இருந்து பெருந்துறை பஸ் நிலையம், சென்னிமலை, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் அந்த வழியாக வர முடியாமல், பெருந்துறை நால்ரோட்டுக்கு சென்று, அங்கிருந்து பஸ் நிலையத்துக்கு செல்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் தினசரி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்த வழி தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவலின் காரணமாக, கடந்த 2 மாதங்களாக பெருந்துறை பஸ் நிலையத்தில் தினசரி மார்க்கெட் இயங்கி வந்தது. அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படவில்லை. கடந்த 12-ந்தேதிக்குப் பிறகு தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதையடுத்து, பஸ் நிலையத்தில் இருந்து தினசரி மார்க்கெட், மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை பெருந்துறை தினசரி மார்க்கெட் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘இதை தவிர்க்க தற்போதுள்ள பஸ் நிலையம் பகுதிக்கே தினசரி மார்க்கெட்டை மாற்ற வேண்டும். அதே சமயம், பஸ் நிலையத்தை வாரச்சந்தை பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்’ என்றனர்.

மேலும் செய்திகள்