பவானி அருகே பெண் கொலை: ‘கள்ளக்காதலை தொடர்ந்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன்’ கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

பவானி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவர், கள்ளக்காதலை தொடர்ந்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.;

Update:2021-07-19 02:50 IST
பவானி
பவானி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவர், கள்ளக்காதலை தொடர்ந்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
குடும்பத்தகராறு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்தவர் கருப்பன் (வயது 30). இவர் வாடகைக்கு சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும் சித்தோடு கொங்கம்பாளையம் அம்பேத்கர்காலனியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ரேவதிக்கும் (28) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு யஸ்வந்த், ரோகித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
ரேவதி கொங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் சத்துணவு ஆயாவாக பணியாற்றி வரும் ஒருவருக்கு உதவியாளராக இருந்து வந்தார். அவர் அதிக நேரம் செல்போனில் பேசி கொண்டு இருந்ததால் கருப்பனுக்கு ரேவதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வந்தது. 
கொலை
இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பன், ரேவதியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். 
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேவதியை கொலை செய்த கருப்பனை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே சித்தோடு போலீசில் கருப்பன் தனது மனைவியை கொலை செய்ததாக சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கருப்பன் போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கள்ளக்காதல்
நான் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக எனது மனைவி ரேவதி யாரிடமோ நீண்ட நேரமாக போனில் சிரித்து, சிரித்து பேசி வந்தார். இதனால் அவர் வேறு ஒருவரிடம் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதற்காக மனைவியை கண்டித்தபோது எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவில் ரேவதி யாரிடமோ செல்போனில் பேசினார். அவள் கள்ளக்காதலை தொடர்ந்ததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ரேவதியிடம் செல்போனில் பேசக்கூடாது, கள்ளக்காதலை கைவிட வேண்டும் என்று எச்சரித்தேன். அதையும் மீறி என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அருகில் இருந்த துண்டை எடுத்து ரேவதியின் கழுத்தை நெரித்து கொன்றேன்.
இவ்வாறு கருப்பன் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்