அரசு ஊதியம் பெறுவோர் சி.எஸ்.ஐ. மண்டல தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு

அரசு ஊதியம் பெறுவோர் சி.எஸ்.ஐ. மண்டல தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2021-07-20 19:47 GMT
மதுரை, ஜூலை
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சி.எஸ்.ஐ. கல்வி நிறுவனங்களில் பணியாற்றி, அரசு ஊதியம் பெறுபவர்கள் சி.எஸ்.ஐ. மதுரை-ராமநாதபுரம் திருப்பேராயம் நிர்வாக தேர்தலில் போட்டியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு அரசு ஊதியங்களை பெறுபவர்கள், இதுபோன்ற நிர்வாக பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
எனவே பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் குமரி மாவட்ட சி.எஸ்.ஐ. நிர்வாக பதவிக்கான தேர்தலில் போட்டியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது, அரசு துறை ஊழியர்கள், சி.எஸ்.ஐ. மண்டல நிர்வாக பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது குறித்து விதிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டு உள்ளன. 
எனவே குமரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், சி.எஸ்.ஐ. மண்டல நிர்வாக பதவிகளில் இல்லை என குமரி மாவட்ட கலெக்டர் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்