காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது

காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது;

Update:2021-07-24 01:54 IST
மதுரை, ஜூலை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் கற்பிக்கப்படும் சுயநிதி பட்டப்படிப்புகளுக்கு இணைப்பு கட்டணமாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்து கடந்த 2006-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இணைப்பு கட்டண பாக்கியை 31.7.2016-க்குள் செலுத்தும்படி கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக பதிவாளர் 1.7.2016-ல் உத்தரவிட்டார். இணைப்பு கட்டணமானது பல்கலைக்கழக சட்டப்படி நிர்ணயிக்கப்படவில்லை. கட்டணத்தை மாற்றியமைத்ததில் விதிகளை பின்பற்றவில்லை. இதற்காக பல்கலைக்கழக வேந்தரான கவர்னரிடம் ஒப்புதல் பெறவில்லை. எனவே கல்லூரிகளிடம் இணைப்பு கட்டணத்தை செலுத்துமாறு பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல மேலும் சிலர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில், பல்கலைக்கழகம் சார்பில் இணைப்பு கட்டணம் 2006-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை. தமிழகத்தில் பிற பல்கலைக்கழகங்களை ஒப்பிடும்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணைப்பு கட்டணம் குறைவாக உள்ளது. இணைப்பு கட்டணம் நிர்ணயிப்பதில் பல்கலைக்கழக வேந்தரிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் அல்ல.
மேலும், இணைப்பு கட்டண நிர்ணயம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு கல்லூரிகள் சார்பில் பலமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை. இணைப்பு கட்டணத்தை மாற்றியமைக்கப்பட்டதற்கு பல்கலைக்கழக வேந்தரிடம் அனுமதி பெறவில்லை. எனவே சுயநிதி பிரிவில் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இணைப்பு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 
இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்