கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை-பணம் கொள்ளை

கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2021-07-26 02:43 IST
கடத்தூர்
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவில் நிர்வாகி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தகோவிலின் நிர்வாகியாக இருந்து வருபவர் மணி (வயது 72). இவருடைய வீடு கோவிலின் பின்புறம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மணி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இந்தநிலையில் சம்பவத்தன்று மணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோபி போலீசாருக்கும், அருகே உள்ள தெருவில் வசிக்கும் அவருடைய மகன் சிவக்குமாருக்கும் தகவல் கொடுத்தார்கள்.
நகை-பணம் திருட்டு
அதன் பேரில் விரைந்து வந்த சிவக்குமார் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 7½ பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டையும், பீரோவையும் உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. 
இதற்கிடையே கோபி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்