குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பெண்கள் வந்ததால் பரபரப்பு

குடிநீர் வசதி கேட்டு, காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-26 22:40 GMT
ஈரோடு
குடிநீர் வசதி கேட்டு, காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காலி குடங்களுடன்...
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பவானி அருகே உள்ள புன்னம் ஊராட்சி வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களை தலையிலும், இடுப்பிலும் வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கலெக்டர் அலுவலகத்துக்குள் காலி குடங்களுடன் செல்லக்கூடாது என்றும், கோஷங்கள் எழுப்பக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டியில் போட்டனர்.
குடிநீர் இணைப்பு
அதைத்தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:-
பவானி தாலுகா தளவாய்பேட்டையில் இருந்து ஒலகடம் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்லும் வழியில், ஜம்பைக்கு முன்பாக, பெரிய மற்றும் சின்னவடமலைபாளையம் கிராமங்கள் உள்ளன. அதனை ஒட்டி வண்ணாம்பாறை கிராமம் உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மேற்கண்ட குடிநீர் இணைப்பில் இருந்து சிறிய குழாய் அமைத்து, வண்ணாம்பாறையில் உள்ளவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அந்த நீரை நாங்கள் பயன்படுத்தி வந்தோம்.
இந்த நிலையில் கடந்த வாரம், ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் வந்த அதிகாரிகள், இந்த குடிநீர் இணைப்பை துண்டித்துவிட்டு, அனுமதி பெறாமல் வழங்கி உள்ளதாக கூறி சென்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நாங்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் உப்புநீராக இருப்பதால் எங்களால் அதை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்