படப்பை அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அணிவகுத்து நின்ற கனரக வாகனங்கள்

படப்பை அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அணிவகுத்து நின்ற கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் அவதி.

Update: 2021-07-28 04:39 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வண்டலூர் வாலாஜாபாத் சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது‌. அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக இந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் படப்பை அருகே வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழி சாலையில் படப்பை அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையிட்டு அபராதம் விதிக்கப்படுவதை அறிந்த டிரைவர்கள் வண்டலூர் வாலாஜாபாத் 6 வழி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகனை சாலையில் நிறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளானார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது:- அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வில் ஈடுபடுவதும் டிரைவர்கள் லாரியை சாலையில் நிறுத்தி வைப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபடும்போது சாலையில் இடையூறு ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆய்வு முடிந்து அதிகாரிகள் சென்றதும் ஒரே நேரத்தில் சாலையில் லாரிகள் அணிவகுத்து செல்கிறது இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்