பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குைறந்ததால் பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை நீர்வரத்து குறைந்தது.

Update: 2021-07-29 00:35 GMT
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதன் மூலம் அணையின் நீர்மட்டம் கடந்த 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி தொடர்ந்து 4-வது முறையாக 100 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,816 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,720 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,458 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. இதனால் பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 1,430 ஆக குறைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்