காரில் கடத்தி வந்த 240 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 8 பேர் கைது

உசிலம்பட்டியில் வாகன சோதனையின்போது காரில் கடத்தி வந்த 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-07-30 20:38 GMT
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் வாகன சோதனையின்போது காரில் கடத்தி வந்த 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. பஸ், ரெயில் நிலையம், மக்கள் கூடும் இடங்கள், டாஸ்மாக் கடை போன்ற இடங்களில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடக்கிறது.
இதேபோல் திருமங்கலம், சேடப்பட்டி, பேரையூர், மேலூர் உள்ளிட்ட புறநகர் பகுதியிலும், மதுரை நகர் பகுதியிலும் கஞ்சா விற்பனை கும்பல் அதிகரித்துள்ளன. 
வாகன சோதனை
இந்த நிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் உசிலம்பட்டியில் நேற்றுமுன் தினம் இரவு தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வத்தலகுண்டு சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணையில், வடகாட்டுப்பட்டி சேர்ந்த குமார் (41), அன்னம்பாரிபட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டி (37) வெள்ளைமலைபட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (35), வலையபட்டி சேர்ந்த ஜெயபிரகாஷ் (21), வெள்ளைமலை பட்டியை சேர்ந்த இளங்கோவன்(32), போலக்கபட்டியை சேர்ந்த சுரேஷ் (24), செல்லம்பட்டி சேர்ந்த முத்துராஜா(42), இவருடைய மனைவி மேனகா(29) என ெதரிய வந்தது. 
கைது
இவர்களை கைது செய்த போலீார் அவர்கள் கடத்தி வந்த 240 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பெரியபாலார்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன், கீரிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 2 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்