நம்பியூர் பகுதியில் 200 பனியன் நிறுவனங்கள் மூடல்: தையல் உரிமையாளர்கள் கூலிஉயர்வு கேட்டு வேலை நிறுத்தம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

நம்பியூர் பகுதியில் தையல் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200 பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

Update: 2021-08-02 21:24 GMT
நம்பியூர்
நம்பியூர் பகுதியில் தையல் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200 பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
வேலைநிறுத்தம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், எம்மாம்பூண்டி, நம்பியூர், கெட்டிசெவியூர், குருமந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களிடம் இருந்து தையல் உரிமையாளர்கள் பனியன் துணிகளை மொத்தமாக வாங்கி அதை வெட்டி, தைத்து, அயர்ன், பேக்கிங் செய்து விற்பனைக்கு தயார் செய்து கொடுத்து வருகிறார்கள்.
இவர்களது கீழ் ஏராளமான தையல் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.  இந்த நிலையில் தையல் உரிமையாளர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
கூலி உயர்வு கோரி...
இதுகுறித்து நம்பியூர் வட்டார தையல் உரிமையாளர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு, தையல் நூல் விலை உயர்வு காரணத்தினால் எங்களது தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கூலியையே பின்பற்றி வழங்கி வருகின்றனர். கூலியை உயர்த்தி கொடுத்தால் மட்டுமே மேற்கொண்டு எங்களால் தொழிலை செய்ய முடியும். இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.  எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும்’ என்றனர்.
இந்த நிலையில் தையல் உரிமையாளர்களுக்கும், பனியன் நிறுவனங்களுக்கும் இடையே திருப்பூரில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும் செய்திகள்