ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோட்டில் நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-08-02 21:24 GMT
ஈரோடு
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நிதி நிறுவன அதிபர்
ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதி என்கிற மதிவாணன் (வயது 40). நிதி நிறுவன அதிபர். இவர் தீபா பேரவையில் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். மேலும் இவர் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ரோட்டில் உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியில் இ-சேவை மையமும் வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனது இ-சேவை மையத்தின் முன்பு நாற்காலி போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த 3-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென மதிவாணனை அரிவாளால் வெட்டினர். அப்போது அவர் கையால் தடுத்தார். இதில் அவரது கையில் வெட்டுப்பட்டு விரல்கள் துண்டானது.
வெட்டி படுகொலை
பின்னர் அவர்கள் மதிவாணனின் தலையில் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைத்தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் (கருங்கல்பாளையம்), பன்னீர்செல்வம் (ஈரோடு டவுன்) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மதிவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிவாணனை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்