ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மூடப்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் முககவசம் அணியாமல் குவிந்த பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
விழிப்புணர்வு பிரசாரம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை ஊராட்சியில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலையில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமல்ராஜ், முத்துசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பொதுமக்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். கொரோனா விதிமுறையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுநாதன், ஊராட்சி செயலர் சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது ஆடி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை கோவில் வாசலில் பக்தர்கள் கொரோனா விதிமுறையை பின்பற்றாமல் திரண்டு இருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
பக்தர்களுக்கு அபராதம்
புகாரையடுத்து கோவில் பகுதிக்கு விரைந்து சென்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவில் வாசலில் தேங்காயை உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடியிருந்ததை கண்டனர்.அப்போது முக கவசம் அணியாத 10 பக்தர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.