நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி; தம்பதி கைது

சினிமா பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-08-06 01:13 IST
மதுரை,

மதுரை பெத்தானியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகாரில், பெத்தானியாபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், அந்த பகுதியை சேர்ந்த நபர்களிடம் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை என்ற பெயரில் சதுரங்க வேட்டை பட பாணியில் இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், மற்றவர்களை உறுப்பினர்களாக சேர்த்து விடும் பட்சத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட பணம் கமிஷனாக கிடைக்கும். அதிக நபர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் நபர்களுக்கு கூடுதலாக கமிஷன் கிடைக்கும். இதில் என்னை போன்ற பலர் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் இருந்து அவர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், அந்த நிறுவனத்தின் மூலம் ரூ.2 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி இந்திரா பானுமதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
மேலும், இந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் தங்களிடம் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிக லாபம் மற்றும் அதிக வட்டி தருவதாக இதுபோன்ற மோசடி நிறுவனங்களின் போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்