கோபி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்கள் கைது- 27 பவுன் நகை மீட்பு

கோபி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.;

Update:2021-08-13 03:46 IST
கடத்தூர்
கோபி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. 
கொள்ளை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் மனைவி மஞ்சுளா (வயது 32) என்பவரின் வீட்டில் கடந்த மாதம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4½ பவுன் நகையை திருடி சென்றனர். 
இதேபோல் கடந்த மே மாதம் நாகமலை விரிவாக்கம் தாமு நகரை சேர்ந்த சரவணன் (35) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகளை திருடி சென்றனர். மேலும் நம்பியூ்ா அருகே உள்ள தைலாம்பாளையம் பெருமாநல்லூர் ரோட்டை சேர்ந்த சதீஸ்குமார் (26) என்பவரது வீட்டின்  பூட்டை உடைத்து 7 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதுமட்டுமின்றி கடந்த ஜூன் மாதம் லாகம்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (63) என்பவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்து இருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுபோல் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளன. 
இதுகுறித்து கோபி, வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். 
கைது
மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி திருச்சி மாவட்டம் துவாக்குடி சமாதானபுரத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் சிங்காரவேலன் (32),  சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் காட்டை சேர்ந்த ஜெயபால் மகன் மைவிழிச்செல்வன் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்