ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம்: கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வேண்டுகோள்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெண்கள் பயணம்
ஈரோடு மாவட்டத்தில் 13 பணிமனைகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்குக்கு பின்னர் இதில் 60 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது ஊரடங்கு தளர்வால் கடைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் முழுமையாக செயல்படுகின்றன. எனவே எல்லா தேவைகளுக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.
தற்போது தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு பயண கட்டணம் இலவசம் என்பதால் அதிக அளவில் பெண்கள் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
பயணிகள் கூட்டம்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கலெக்டரின் உத்தரவால் மாலை 5 மணிக்கு அனைத்து வகை நிறுவனங்களும் அடைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் இரவு வரை பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அரசு பஸ்களை 50 சதவீதம் பயணிகளுடன் இயக்க வேண்டும் என்ற அறிவிப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை. அதுபோல் பயணிகளுக்கு சானிடைசர் உள்ளிட்டவை வழங்குவதோ, முகக்கவசம் அணிகிறார்களா என்பதை கவனிக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் உள்ளது. சில நேரங்களில் 60 பேர் பயணம் செய்யும் பஸ்களில் 120-க்கும் மேற்பட்டவர்கள் செல்கிறார்கள்.
கொரோனா பரவல்
குறிப்பாக அதிக அளவில் பெண்கள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு கட்டணம் இல்லை என்றாலும், கண்டக்டர்கள் இலவச பயணத்துக்கான டிக்கெட் வழங்குவதற்காக நெரிசலில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
இது தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்சில் பயணம் செய்பவர்கள் மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி முகக்கவசங்களையும் சரியாக அணிவது இல்லை. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 3-வது அலையின் தொடக்கம் பஸ் பயணிகள் மூலமாகத்தான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் பஸ்கள்
எனவே மாவட்டத்தில் கூடுதலாக முழு அளவில் அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும். 50 சதவீதம் பயணிகள் என்ற அளவுகோலை கட்டாயப்படுத்த வேண்டும். கொரோனா முழுமைபெறும்வரை பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கும் பணியை கண்டக்டர்களுக்கு கட்டாயப்படுத்தக்கூடாது. காரணம் சில பெண்கள் எந்த வேலையும் இல்லை என்று டவுன் பஸ்களில் ஏறி உட்கார்ந்து பயணம் செய்து பொழுதுபோக்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.
இதை தடுக்க கொரோனா காலக்கட்டம் முடிவுக்கு வரும் வரை தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அன்றாடம் வேலைகளுக்கு செல்லும் பெண்கள், தடை இல்லாத நிகழ்வுகளுக்கு உரிய ஆதாரங்களுடன் செல்லும் பெண்களுக்கு மட்டுமே இலவசம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப பெண்கள் வேலைக்கு சென்று திரும்ப, போக்குவரத்து செலவு பாரமாகி விடக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தை பாழ்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்துவதை தடுக்க வேண்டும்.
பெண்கள் அதிக அளவில் பயணம் செய்ததாக தவறாக கணக்கு காட்டும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.