கவுந்தப்பாடியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்த தங்க நகையை சேதப்படுத்தி மோசடி; போலீஸ் சூப்பிரண்டிடம் தம்பதியினர் மனு

கவுந்தப்பாடியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்த தங்க நகையை சேதப்படுத்தி மோசடி செய்ததாக, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், தம்பதியினர் புகார் மனு கொடுத்தனர்.;

Update:2021-08-17 02:49 IST
ஈரோடு
கவுந்தப்பாடியில்  உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்த தங்க நகையை சேதப்படுத்தி மோசடி செய்ததாக, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், தம்பதியினர் புகார் மனு கொடுத்தனர்.
நகை அடமானம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் தினேஷ். இவர் சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோதை. இந்த தம்பதியினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கவுந்தப்பாடியில் உள்ள ஒரு வங்கியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி 66 கிராம் எடை உள்ள தங்க நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் பெற்றேன். தவணை தேதி வந்ததை நினைவூட்டி முழுமையாக தொகையை செலுத்துமாறு வங்கி அலுவலர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை.
ரசீது
தவணை தொகை மற்றும் கடன் தொகை முழுவதையும் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி என் தந்தையின் வங்கி கணக்கிற்கு அனுப்பி செலுத்துமாறு கூறினேன். அதன் பின்னர் கடன் தொகை முழுவதுமாக வங்கியில் செலுத்தப்பட்டது. வங்கியின் நகை ஈட்டு கடன் ரசீது என்னிடம் இருந்தது. வங்கிக்கு ரசீதுடன் வந்து நகையை பெற்று செல்லுமாறு வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 13-ந்தேதி வங்கிக்கு நேரடியாக சென்று ரசீது அளித்து என் நகையை தருமாறு கூறினேன். அப்போது வங்கி துணை மேலாளர் ஒரு நகையை என்னிடம் கொடுத்தார். அது என்னுடைய நகை இல்லாததால் நான் அதை வாங்க மறுத்தேன். ஆனால் அவர் அதை வாங்கி கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தினார். அதனால் நான் இதுபற்றி வங்கி மேலாளரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. மாறாக புதிய நகை செய்து தருவதாக கூறினார்.
மோசடி
இதனால் நான் என்னுடைய நகையை காண்பிக்கும்மாறு கேட்டேன். நான் அடமானம் வைத்த நகை 3 துண்டுகளாக உடைந்த நிலையில் வங்கி நிர்வாகத்தினர் காண்பித்தனா். மேலும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தருவதாகவும் கெஞ்சினர். இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர், நகை கடன் அடமான விண்ணப்ப பத்திரத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி நகை இழப்பிற்கு வங்கி பொறுப்பல்ல. சட்டப்படி நீங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது என கூறி அச்சுறுத்தினார்.
இதுதொடர்பான ஆடியோ என்னிடம் உள்ளது. நான் அடமானம் வைத்த அதே எடையுள்ள புதிய நகை மற்றும் நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் தொகையை பெற்று தர வேண்டும். இதுபோன்ற மோசடி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்