‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி ரோட்டில் தோண்டப்பட்ட குழி சீரமைப்பு

தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஈரோடு அருகே பல மாதங்களாக ரோட்டில் காணப்பட்ட குழி சீரமைக்கப்பட்டது.;

Update:2021-08-20 02:49 IST
சென்னிமலை
தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஈரோடு அருகே பல மாதங்களாக ரோட்டில் காணப்பட்ட குழி  சீரமைக்கப்பட்டது. 
குழி
ஈரோடு- சென்னிமலை ரோட்டில் காசிபாளையம் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே பல மாதங்களுக்கு முன்பு ரோட்டின் குறுக்கே தோண்டப்பட்ட குழி இருந்து வந்தது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் குழியை கண்டதும் திடீரென பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
ரோடு சீரமைப்பு
இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் படத்துடன் பிரசுரமாகியது. 
இந்த நிலையில் சென்னிமலை ரோட்டில் குழி தோண்டப்பட்ட இடத்துக்கு நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்  வந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக மண்ணை அள்ளிப்போட்டு ரோட்டை சீர் செய்தனர். 
கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘தினத்தந்தி நாளிதழில் பிரசுரமான செய்தியை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் வந்து குழியில் மண்ணை அள்ளிப்போட்டு சீரமைத்துவிட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தற்போது குழியில் போடப்பட்டு உள்ள மண்ணானது, பலத்த மழை பெய்தால் அரிக்கப்பட்டு மீண்டும் குழி ஆகிவிடும். எனவே குழி இருந்த இடத்தில் தார் ரோடு போட்டு பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்