அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் மற்றொரு தரப்பினர் நுழைந்து போராட்டம்

ஈரோட்டில் நடந்த அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் மற்றொரு தரப்பினர் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-21 15:42 GMT
ஈரோட்டில் நடந்த அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் மற்றொரு தரப்பினர் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 2 பிரிவுகளாக இயங்கி வருகிறது. இதில், ஒரு பிரிவுக்கு மாநில தலைவராக அன்பரசன் என்பவரும் மற்றொரு பிரிவுக்கு மாநில தலைவராக தமிழ்செல்வி என்பவரும் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மையத்தின் செயற்குழு கூட்டம் நேற்று ஈரோடு பெரியார் மன்றத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு, பவானியில் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. அப்போது மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31-ந்தேதி கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது என்றும், வருகிற செப்டம்பர் மாதம் 9-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம்-பதற்றம்
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார், சங்க நிர்வாகிகளிடம் ‘கூட்டத்திற்கு அனுமதி இல்லை. உடனடியாக கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறுங்கள்’ என்றனர்.
அப்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மற்றொரு தரப்பினர், மாநில துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்த அறையின் நுழைவு வாயிலில் நின்று, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அரசு ஊழியர்கள் சங்கத்தினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அறைக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அறைக்குள் இருந்த தமிழ்செல்வி தலைமையிலானவர்களை வெளியேற்றி, காரில் அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இரு தரப்பாக பிரிந்து மோதல் போக்குடன் நடந்து கொண்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
போலி சங்கம்
இதுகுறித்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், லோகோவை முறையாக பயன்படுத்துகிறோம். அப்போது தோல்வி அடைந்து, வெளியேற்றப்பட்டவர்கள் போலியாக சங்கத்தை நடத்தி, சங்கத்திலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
சில அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்கும் போலி சங்கத்தினர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடி, லோகோ, பெயரை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தக்கூடாது எனக்கூறி கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஆர்.டி.ஓ., போன்றோரிடம் புகார் செய்ததால், அவர்களது கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ரகசியமாக கூட்டத்தை நடத்தி, சங்க பெயரை பயன்படுத்தியதால், அவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்