24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி;

Update:2021-08-24 01:49 IST
மதுரை
மதுரையில் 18 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி மதுரையில் 9½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மதுரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், முன்பதிவு இல்லாமலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நகர் பகுதியில் தொடங்கி இருக்கிறது. இதனால், மதுரை நகர் பகுதி மக்கள் முன்பதிவு செய்யாமல் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இதுபோல், முன்பதிவு செய்தவர்களுக்கும் அதற்கான குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 23-ந்தேதி முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கான தடுப்பூசி மையமான மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என்பதை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல் இரவிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதுபோல், இரவிலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்