வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு வடிவேல் நகரில் அசோக்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.;
இந்நிலையில், அசோக்குமார் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறியடித்து கொண்டு வீட்டுக்குள் சென்று பீரோவை சோதனை செய்தபோது, அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.